கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா வார்டு !!!
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைகளுக்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த சூழலில் தமிழகம் முழுவதிலும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை ஏற்படுத்தி தயார் நிலையில் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 200 படுக்கை வசதிகளுடன் தனி கட்டிடத்தில் கொரோனா வார்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் சுதா கூறுகையில், கொரோனா வார்டு தனி கட்டிடத்தில் 200 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாகவும், மருத்துவர்களுக்கும் உரிய பாதுகாப்பு முறைகளை கையாள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு அனுமதி வழங்கிய உடனே சிகிச்சை அளிக்க தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த செய்தியாளர்கள் சந்திப்பி போது பி.எஸ்.ஜி மருத்துவமனை டீன் ராமலிங்கம், மருத்துவர்கள் முரளி, கார்த்திகேயன், ஜெய்வர்த்தனா மற்றும் லாவண்யா ஆகியோர் உடனிருந்தனர்.







