--- --:--:-- --

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி சுறுசுறுப்பு…! புதிதாக டாக்டர்கள் செவிலியர்களை நியமிக்க உத்தரவு!!

16

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளார். புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள்,1500 லேப் டெக்னீசியன்களை உடனடியாக நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளையும், முன்னேற்பாடுகளை தயார் செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இன்று காலை முதல்வர் எடப்பாடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

இதைத் தொடர்ந்து சென்னையில் தமது இல்லத்தில் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களில் புதியதாக 530 மருத்துவர்கள்,1000 செவிலியர்கள் மற்றும்1508 லேப் டெக்னீசியன்களை நியமிக்க உத்தரவிட்டார். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் விதிகளுக்கு உட்பட்டு பணி நியமன ஆணைகளை உடனே வழங்கவும், பணி நியமனம் பெற்றவர்கள் 3 நாட்களில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,  புதிதாக 200 ஆம்புலன்ஸ்களையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இதற்கிடையே, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.சென்னையைப் போல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் 25 சதவீத படுக்கைகளுடன் தனி வார்டுகளை தயார்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கிடையே கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், தங்களால் முயன்ற அளவு நிதியுதவி வழங்குமாறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதி உதவிக்கு முழு வருமான வரிச் சலுகை கிடைக்கும் எனவும், தன்னிடம் நிவாரண நிதியை நேரில் வழங்க ஆர்வம் காட்டுவதை விட வங்கிக் கணக்கில் நிதியை செலுத்தலாம் எனவும், ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிதியுதவி செய்பவர்களின் பெயர் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon