--- --:--:-- --

முழு ஊரடங்காவது மண்ணாங்கட்டியாவது..? திருப்பூர் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர்..! காவல்துறையும் துணை போகிறதா?

setws

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரிலோ காலை முதலே டாஸ்மாக் கடைகளின் பார்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை கூடுதல் விலை வைத்து ஜோராக நடந்து, கல்லா கட்டி வருகின்றனர்.பகிரங்கமாக நடைபெறும் இந்த கள்ள விற்பனைக்கு காவல்துறையும் துணை போகிறதோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவால் திருப்பூரிலும் மெடிக்கல் மற்றும் பால் பூத் தவிர அனைத்து கடைகள், பெட்ரோல் பங்க்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலைய எல்லையிலும் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி ஊர்சுற்றி வருபவர்களும் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
ஆனால் திருப்பூர் மாநகரில் அனைத்து டாஸ்மாக் பார்களிலும் டம்ளர் ,ஸ்னாக்ஸ் உடன் சரக்கு அமோக விற்பனை நடைபெற்று வருவது தான் கொரோனா கொடுமையிலும் மோசமான கொடுமையாக உள்ளது.

திருப்பூரில் பல டாஸ்மாக் கடைகளிலும், தனி வாசல் வழியாக இந்த விற்பனை ஜோராக நடைபெறுகிறது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.50 முதல் 100 வரை கூடுதல் விலை வைத்து அமோகமாக கல்லா கட்டி வருகின்றனர். இதில் வெள்ளியங்காடு 4 ரோடு அருகிலுள்ள பாறைகுழி 1992 கடையில் குடிமகன்கள் ஆற அமர அமர்ந்து சரக்கடித்து செல்கிறார்கள். இப்படி நகரின் பெரும்பாலான கடைகளிலும் கள்ளத்தனமான விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

சாட்டையை சுழற்றுவாரா?

கொரோனா காலத்தில் பொது மக்களிடம் வீராப்பு காட்டும் காவல்துறையினர், இந்த திருட்டுத்தனமாக மது விற்பதை கண்டு கொள்ளாதது ஏன்? இவர்களும் துணை போகிறார்களா? என்ற சந்தேகமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற கார்த்திகேயனாவது நகரில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை நடப்பதை முடிவு கட்ட சாட்டையை சுழற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Right Menu Icon