காக்கிகளுடன் சேர்ந்து “தடி” தூக்கி “ரவுசு” காட்டும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினருக்கு “ஆப்பு”… 6 மாவட்டங்களில் தடை!!
சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, போலீசாருக்கு உதவியாக பணியாற்றும் பிரென்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களை பயன்படுத்த விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரென்ட்ஸ் ஆப் போலீஸ் … தன்னார்வலர்கள் என கூறிக் கொண்டு, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் போலீசாருடன் சேர்ந்து ஒரு சிலர் எடுபிடிகளாக செயல்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இவர்களும் கைகளில் தடிகளை ஏந்திக் கொண்டு ரவுசு காட்டி அட்டகாசம் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. பெயரில் தான் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் உள்ளதே தவிர, பொது மக்களிடம் கெடுபிடி காட்டுவது, போலீசுக்கு மாமூல் வாங்கித் தருவது போன்ற ஏடாகூட எடுபிடிகளையும் செய்து வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் போலீசாரால் தந்தை, மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திலும், இந்த பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சிலருக்கும் பங்குண்டு என்ற சர்ச்சை எழுந்துள்ளது.போலீசாருடன் சேர்ந்து சித்ரவதை செய்தது மற்றும் அதனை மறைக்க உடந்தையாக இருந்த இந்த பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட கயவர்களையும் கொலை வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது.அத்துடன் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், திருச்சி சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதித்து திருச்சி சரக டிஐஜி மற்றும் விழுப்புரம் எஸ்.பி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.






