வாரணாசிக்கு சுற்றுலா சென்று வந்தவர்களில் இருவருக்கு கொரோனா!
ஊரடங்கால் வாரணாசியில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்தால் நிம்மதியாக இருக்கலாம் என கருதினர். ஆனால் அவர்களில் இருவருக்கு கொரொனா கண்டறியப்பட்டதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடங்குவதற்கு முன்பு சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 127 பேர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சுற்றுலா சென்றனர். கொரொனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்களால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட நாட்களாக வாரணாசியில் தவித்து வந்த அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து உத்திரப்பிரதேச மாநில அரசு சிறப்புப் பேருந்து மூலம் தமிழக பயணிகளை அனுப்பி வைத்தது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துவரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இரு பெண்களுக்கு கொரொனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மற்ற 125 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்திற்கு வந்து விட்டால் பாதுகாப்பாக இருக்கலாம் என கருதி 2,160 கிலோமீட்டர் பேருந்திலேயே பயணித்து வந்தவர்களை கொரொனா தனிமை சிறையில் வைத்திருக்கிறது.







