--- --:--:-- --

கொரொனா உறுதியான மூதாட்டி மருத்துவமனையில் இருந்து தப்பி நெய்வேலிக்கு ஆட்டோவில் பயணம்..!

20

சென்னை எம்ஜிஆர் நகரில் ஆட்டோ ஓட்டுநரை மட்டுமல்ல காவல்துறையினரையும் கதைசொல்லி அதிரவைத்த 70வயது கஸ்தூரி பாட்டி இவர்தான். எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் நகரை சேர்ந்த கஸ்தூரிக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் அருகிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

ஒரே ஒருநாள் அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் அவர் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது தெரியாததால் இதுகுறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் மருத்துவமனை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சிகிச்சையில் இருந்த மூதாட்டி எங்கு சென்றார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரிக்க தொடங்கினார்.

 

அப்போது கஸ்தூரி பாட்டியின் மகள் நெய்வேலியில் இருக்கும் தகவல் அறிந்து அவரை தொடர்புகொண்டு விசாரித்த போலீசார் அவர் அங்கு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறினார். சிறிது நேரத்தில் கஸ்தூரி பாட்டி தனது மகளுக்கு போன் செய்து நெய்வேலிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

 

இதையடுத்து அவரது மகள் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது தாய் ஆட்டோ ஒன்றில் நெய்வேலிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் இருந்து தனக்கு தகவல் சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் எண்ணை வாங்கிய காவல்துறையினர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆட்டோவில் வந்துள்ள மூதாட்டிக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் அவரை வேறு எங்கும் கொண்டு சென்று விடாதீர்கள் என்றும் அவரை பத்திரமாக எம்ஜிஆர் நகர் அழைத்து வருமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சவாரி கிடைக்காத நேரத்தில் நல்ல தொகையை வாடகையாக பேசியதோடு மகளை பார்க்கும் ஆவலில் நெய்வேலிக்கு செல்வதாக பாட்டி சொன்ன கதையை
நம்பி சென்றதால் அவசரப்பட்டு சிக்கிக் கொண்டோமே என்று மிரட்சியானபடியே எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு திரும்ப அழைத்து வந்தார்.

 

காவல்துறையினரிடம் கஸ்தூரி பாட்டியை ஒப்படைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் அங்கிருந்து செல்ல முயல அவரை நிறுத்தி வைத்தனர் காவல்துறையினர். கஸ்தூரி பாட்டி தான் மருத்துவமனைக்கு செல்ல முடியாது என்று சாக்குபோக்கு சொல்லி மீண்டும் நலுவ முயன்றார். முதலில் அவரை தொட தயங்கி நின்ற போலீசார் எங்கே அவர் மீண்டும் தப்பி சென்று விடக்கூடாது என்பதால் அவரை கையோடு கூட்டி சென்று வந்த ஆட்டோவிலேயே மீண்டும் ஏற்றி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon