--- --:--:-- --

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி..! திமுக தோழமை கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!!

f939dcab-393a-4754-9141-5981331ff8d2

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவியும் ஊரடங்கு பாதிப்புக்கு நிவாரணமாக ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்குமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் கொரோனா தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

 

இந்தக் கூட்டம் நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்தது. ஆனால், 144 தடையுத்தரவை காரணம் காட்டி சென்னை காவல்துறை, திமுக ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு திடீரென தடை போட்டது. இதனால் நேற்று நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு, காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறும் என மு க .ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 

அதன்படி, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் திமுக தோழமை கட்சிகளின் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon