--- --:--:-- --

குமாரராஜா முத்தையா கைவினைப்பள்ளி சங்க முறைகேடு புகார்..!

5

சென்னையில் புகழ்பெற்ற செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ‘குமாரராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி சங்கம்’ தற்போது பெரும் நிர்வாகச் சிக்கலையும் சட்டப் போராட்டத்தையும் சந்தித்து வருகிறது. இந்தச் சங்கத்தின் செயலாளராக நீண்ட காலம் பொறுப்பு வகித்த குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அண்மையில் மறைந்ததைத் தொடர்ந்து, சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சங்கத்தின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வங்கி முதலீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்களை முறையற்ற வழிகளில் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிலர் முயற்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 

 

இந்த அமைப்பின் உறுப்பினரான வி.பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சங்கத்தின் விதிமுறைகளை மதிக்காமல் கே.டி.ஆர். ராஜா கருப்பன் செட்டி (என்ற கருப்பையா) என்பவர், சட்டவிரோதமாக பொதுக்குழுவைக் கூட்டி சங்கத்தின் சொத்துக்களையும் நிர்வாகத்தையும் அபகரிக்க முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் வருமானத்திற்கு அதிகமாக 800 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறி சங்க விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

 

 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது ஷபீக் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களும் விரிவாகக் கேட்கப்பட்டன. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இந்த நிர்வாகக் குழப்பம் நீடித்தால், அங்கு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் கல்வி நலனும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தப் புகார் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஏற்கனவே இருதரப்பு விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

 

 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொள்வது மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டினார். எனவே, இந்த முறைகேடு புகார் குறித்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக, எவ்விதத் தொய்வுமின்றி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், விசாரணையின் முடிவில் சட்ட விதிமுறைகளின்படி தவறு செய்தவர்கள் மீது மிக விரைவாக உரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ஆணையிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon