--- --:--:-- --

கல்லூரி, பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் நடைபெறும்..! உயர் கல்வித்துறை அறிவிப்பு!!

11

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் நடைபெற இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.

 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு 2-ம் கட்டமாக மே 3-ந்தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

மே மாதம் கோடை விடுமுறை விடப்படுவதால், ஜூன் மாதம் அடுத்த கல்வியாண்டுக்காக கல்லூரிகள் திறக்கும் போது முதலில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகள் முடிந்த பிறகே அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்கள் நடத்தப்படும் என்றும் உயர்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon