--- --:--:-- --

கோவை : மேட்டுப்பாளையம் ” தீண்டாமை தடுப்புச்சுவர் ” இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று.பலத்த போலீஸ் பாதுகாப்பு.அஞ்சலி செலுத்த தடை !!!

7.1

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவரின் வீடு மற்றும் காலியிடம் உள்ளது. இந்த காலியிடத்தை சுற்றி 80 அடி நீளம், 22 அடி உயரத்திற்கு கருங்கல்லால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இருந்தது. இந்த சுவர் 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த காம்பவுண்ட் சுவருக்கு அருகே ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகள் இருந்தன. அந்த வீடுகளில் 4 ஓட்டு வீடுகள், ஒரு வீடு சிமென்ட் ஷீட் கூரையுடன் கட்டப்பட்டிருந்தன.

 

இந்த நிலையில் கடந்தாண்டு இதே நாளின் அதிகாலை 5.30 மணிக்கு அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது,மழையால் சேதமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் அப்படியே சரிந்து அருகில் இருந்த ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகளின் மீது விழுந்தது.

தகவலறிந்ததும் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக போராடி வீடுகளுக்குள் தூங்கிய நிலையில் பலியான 17 பேர் உடல்களையும் மீட்டனர்.விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

 

இடிந்து விழுந்த சுவர் போக சிறிது தூர காம்பவுண்ட் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை பெய்தால், அதுவும் சரிந்து விழும் என அஞ்சப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் மீதமுள்ள காம்பவுண்ட் சுவரையும் இடித்து தள்ள உத்தரவிட்டுள்ளது. வீடுகள் இடிந்த இடத்திற்கு அருகே ரங்கத்தாள். வேலுச்சாமி, வீரம்மாள் வீடு உட்பட 8 பேரின் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை காலி செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

 

விபத்தில் பலியான 17 பேரில் 3 பேர் மாணவ, மாணவிகள்.விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மார்ச்சுவரி வேனில் ஏற்றி பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள கோவிந்தபிள்ளை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கே 16 பேரின் சடலம் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் சடலங்களை எடுத்து சென்ற உறவினர்கள் சடங்குகளை செய்து தகனம் செய்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.மேலும்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக உத்தரவிட்டார். மேலும்,நேரிலும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இச்சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகி விட்ட நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதலாமாண்டு நினைவஞ்சலி நடைபெற உள்ளதையொட்டி 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.எஸ்.பி.அருளரசு தலைமையில் கொடி அணிவகுப்பும் நடைபெற்றது.மேலும்,அரசியல் கட்சியினர்,அமைப்பினர் அஞ்சலி செலுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்த கூட தங்களால் முடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

17 பேரை காவு வாங்கிய காம்பவுண்ட் சுவர் இருந்த அதே இடத்தில் அதன் உரிமையாளர் மீண்டும் சுவர் எழுப்பியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon