கோவை : அவிநாசி – அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் முடியும் நிலையில் உள்ளது.விரைவில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வரப்படும் – சபாநாயகர் தனபால் தகவல் !!!
தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பான ரூ.2,500 பணம் மற்றும் கரும்பு,பச்சரிசி வெல்லம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் அன்னூரில் அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக சட்டசபை சபாநாயகருமான தனபால் கலந்துகொண்டு பிள்ளையப்பம் பாளையம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய சபாநாயகர் அவிநாசி – அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் முடியும் நிலையில் உள்ளது.விரைவில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருவதாகவும், அதுபோக பல்வேறு நலத்திட்டப்பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக அன்னூர் பேருந்து நிலையம் அருகே புதிய வார சந்தை கட்டட பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த அவர் அம்மா இரு சக்கர வாகனங்களை உழைக்கும் மகளிருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சாய் செந்தில்,அன்னூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அம்பாள் பழனிசாமி,பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







