12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு… 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் காணப்பட்டது. தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதேபோல 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வினை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வித் துறை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
95.20 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 3,47,527 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும் போல மாணவிகளின் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம். மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் தேர்ச்சி அதிகம்.
மாவட்டத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் 98.07 சதவீதம் தேர்ச்சியும், சிவகங்கை மாவட்ட இரண்டாது இடம் பிடித்து 98.05 சதவீதம் தேர்ச்சியும், கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்து 97.63 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளன. அரசு பள்ளிகளை பொறுத்தவரை, ஈரோடு மாவட்டம் முதலிடம், சிவகங்கை இரண்டாம் இடம் திருச்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.17% தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. சிறைவாசிகள் 250 பேர் தேர்வை எழுதியிருந்ததில், 238 பேர் தேர்ச்சி பெற்றுளனர். வரும் 13ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.





