பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பேசிய பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், இந்த பிறவியில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் அந்தப் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மேலும், நிச்சயம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த நிகழ்ச்சி சர்ச்சையைத் தொடர்ந்து அஷோக் நகர் அரசுப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.





