--- --:--:-- --

ஊரடங்கு முடியும் காலம்…! தொழில்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை

edappad

ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மே 3க்கு பின் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிப்பது பற்றி தொழில்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

 

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வரும் 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பாதிப்புகளில் இருந்து தமிழகம் விடுபடும் என கூறியுள்ளது.

 

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்து, அதன்படி 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களை அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செவ்வாய் கிழமை ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

 

கூட்டத்தில் முதல் அமைச்சர் பேசும்பொழுது, மாவட்ட ஆட்சியர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றன. அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம் என்று கூறினார்.

 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு பின் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்குவது பற்றி தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Right Menu Icon