--- --:--:-- --

சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?

sdhdh

தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக ஒரு போர்க்களம் போல் விறுவிறுப்பாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அறிவாலயத்தின் விளக்குகள் விடிய விடிய எரிகின்றன. ‘கூட்டணி’ எனும் சதுரங்க ஆட்டத்தில், அடுத்தடுத்த நகர்வுகளை முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டிருக்க, அங்கே ஒரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ அரங்கேறியது. அதுதான் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு விவகாரம்.

 

மதில் மேல் பூனையாக அமர்ந்து கொண்டு, “அண்டை வீட்டுக்காரர் (தவெக) அழகாக இருக்கிறார்” என்று ஜாடை காட்டிய காங்கிரஸை, ப.சிதம்பரம் மற்றும் கனிமொழியின் சாணக்கியத்தனம் எப்படி திமுகவின் கூடாரத்திற்குள் கொண்டு வந்ததன் பின்னணியில் நள்ளிரவில் பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறின.

 

மிரட்டிய காங்கிரஸ்... அசையாத ஸ்டாலின்!

கடந்த சில வாரங்களாகவே சத்தியமூர்த்தி பவனில் சலசலப்புகளுக்குப் பஞ்சமில்லை. “நாங்கள் 140 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட தேசியக் கட்சி. எங்களை 25 தொகுதிகளுக்குள் சுருக்கப் பார்க்கிறீர்களா?” என்று காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். ஒருகட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைச் சுட்டிக்காட்டி, திமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுத்தனர்.

 

அவ்வப்போது சில கருத்துக்கணிப்புகளை கையில் எடுத்துக்கொண்டு, “திமுகவுக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது” என்று சமூக வலைதளங்களில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கொளுத்திப் போட்டது அறிவாலயத்தை அதிருப்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

 

ஆனால், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ நிதானமாக ஒரு காய் நகர்த்தினார். காங்கிரஸின் பிடிவாதத்தை உடைக்க, தேமுதிகவை உள்ளே இழுத்தார். ராஜ்யசபா சீட் ஒன்றை தேமுதிகவுக்குத் தூக்கிக் கொடுத்து, “நீங்கள் இல்லையென்றால் எங்களுக்கு மாற்று உண்டு” என்பதைச் சொல்லாமல் சொன்னார். இந்த ‘செக்’ வைக்கும் படலத்தால் காங்கிரஸ் தரப்பில் லேசான நடுக்கம் ஏற்பட்டது.

 

சிதம்பரத்தின் தூது… மசியாத ஸ்டாலின்!

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த டெல்லி மேலிடம், ப.சிதம்பரத்தை தூது அனுப்பியது. சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் செல்வப்பெருந்தகையுடன் ஆலோசனை நடத்திய சிதம்பரம், நேராக முதல்வரைச் சந்திக்கச் சென்றார். “2016-ல் 41 இடங்கள் கொடுத்தீர்கள், இப்போது 25 என்றால் எப்படி? சோனியா அம்மையார் வருத்தப்படுவார். உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும். அட்லீஸ்ட் 2 ராஜ்யசபா சீட்டாவது கொடுங்கள்” என்று அடுக்கினார்.

 

ஆனால் ஸ்டாலின் மிகத் தெளிவாகப் பேசினார். “ஐயா, இது 2021 அல்ல. இப்போது கூட்டணியில் கமல் இருக்கிறார், தேமுதிக வந்திருக்கிறது, எஸ்டிபிஐ இருக்கிறது. எல்லாருக்கும் பங்கு போட வேண்டும். 28 தொகுதிகளுக்கு மேல் ஒரு இன்ச் கூட நகர முடியாது. ராஜ்யசபா சீட் இப்போது ஒன்றுதான், வேண்டுமானால் 2028-ல் இன்னொன்று தருகிறோம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

 

கனிமொழி கையாண்ட ‘மிட்நைட்’ டிப்ளமசி!

ஸ்டாலினுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இழுபறியில் முடிய, அங்கேதான் என்ட்ரி கொடுத்தார் கனிமொழி. ராகுல் காந்திக்குத் தமிழக அரசியல் சூழல் குறித்து சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், சோனியா காந்திக்கு திமுகவுடனான உறவில் விரிசல் ஏற்படுவதில் விருப்பமில்லை. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கனிமொழி, புதன்கிழமை நள்ளிரவில் சோனியா காந்தியிடம் நீண்ட நேரம் உரையாடினார்.

 

“தமிழகத்தில் தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால் அது காங்கிரஸுக்குத் தான் இழப்பு. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் நாம் இணைய வேண்டும்” என்று கனிமொழி விவரித்த விதம், சோனியாவை யோசிக்க வைத்தது. ராகுல் காந்தியிடமும் நிலவரத்தை விளக்கி, காங்கிரஸின் கௌரவத்தையும் விட்டுக் கொடுக்காமல், திமுகவின் பிடிவாதத்தையும் தளர்த்தாமல் 28 இடங்கள் + ஒரு ராஜ்யசபா சீட் என்ற ஃபார்முலாவை ‘கனி’வாகப் பேசி கனிமொழி முடித்து வைத்தார். ஒருவழியாக இழுபறி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் ‘சரண்டர்’ ஆனது.

 

ஒரு சீட்டுக்கு மல்லுக்கட்டு கதர்ச்சட்டைகள்!

 

உடன்பாடு எட்டப்பட்டுவிட்ட நிலையில், இப்போது காங்கிரஸில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாகியுள்ளது. திமுக தரும் “அந்த ஒரு ராஜ்யசபா சீட் யாருக்கு?” என்பதுதான்.

 

“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பார்கள். தமிழகத்தில் திமுக கூட்டணி என்ற யானை உறுதியாகிவிட்டது. திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு விவகாரம், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் ‘பிக் பிரதர்’ யார் என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். அதே சமயம், காங்கிரஸை அரவணைத்துச் செல்வதில் கனிமொழியின் ‘மென்மையான ராஜதந்திரம்’ ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பதில் சந்தேகமில்லை. திமுக தலைமையிலான அணி இன்னும் பலப்பட்டுள்ளது, இனி யுத்தம் களத்தில் தெம்புடன் திமுக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Right Menu Icon