வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் மாலையில் கன மழை பெய்ய தொடங்கியது.
கிண்டி, வடபழனி, பெரம்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, அசோக் நகர், சைதாப்பேட்டை, பெருங்குடி, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தியாகராயநகரில் பொதுமக்கள் ஏராளமானோர் தீபாவளி பண்டிகையை ஒட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.






