பிரணாப் முகர்ஜி காலமானதற்கு 7 நாள் துக்க அனுசரிப்பை அறிவித்துள்ள மத்திய அரசு…!
டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து மூளை அறுவை சிகிச்சையுடன் அவருக்கு கொரொனாவுக்கான சிகிச்சையும் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உடல் நிலை சீராக இருந்த நிலையில் திடீரென மோசம் அடைந்ததால் அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். இதைத்தொடர்ந்து நுரையீரலில் தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரணாப் முகர்ஜி உயிரிழந்தார். டுவிட்டரில் இந்த தகவலை உறுதி செய்த பிரணாப் முகர்ஜியின் மகனும் முன்னாள் எம்பியுமான அபிஜித் முகர்ஜி அவரது உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பிரணாப் முகர்ஜியின் மறைவைத் தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஏழு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மறைவைத் தொடர்ந்து 7 நாட்கள் துக்கம், மத்திய அரசு கட்டடங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில் பிரணாப் முகர்ஜியை மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு துறவி போல தாய் நாட்டிற்காக அவர் சேவை புரிந்ததாக புகழாரம் சூட்டிய ராம்நாத் கோவிந்த் மேதகை என்ற வார்த்தையை பயன் படுத்த கூடாது என பிரணாப் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது என்று தெரிவித்துள்ளார்.






