“கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள்”!! இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் ஊழியர்கள் குறித்து உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்!!
இபாஸ் வழங்க லஞ்சம் வாங்கப்படுவதாக தொடரும் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான விமர்சித்துள்ளனர். லஞ்சம் பெறும் ஊழியர்களை, கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பொதுப் போக்கு வாத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக் கூட இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிலும் மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற முக்கிய காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட உரிய காரணங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்து இ-பாஸ் பெறுவது குதிரைக் கொம்பாக உள்ளதாக தமிழகம் முழுவதும் பலரும் புலம்பும் நிலை உள்ளது.
அதே வேளையில், வழக்கம் போல இந்த இ-பாஸ் விவகாரத்திலும் வஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், சும்மா ஜாலியாக ஊர் சுற்றக் கூட லஞ்சம் கொடுத்தால் எளிதில் இபாஸ் பெற்று விடலாம் என்ற நிலை உள்ளதாக புகார்கள் தொடர்கின்றன. இதில் போலிகள் வேறு முறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள சிறுமிகளை மீட்கக்கோரி சே தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சி.எம்.சிவபாபு என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில்,
முறையாக விண்ணப்பித்தவர்களால் இ பாஸ் பெற இயலாத நிலை உள்ளது. ஆனால்புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள், ஊழியர்கள் இ பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அதிருப்தியுடன் குறிப்பிட்டனர்.
மேலும், கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இ -பாஸ் விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.







