முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக..சூரத் தொகுதியில் போட்டியின்றி மலர்ந்த தாமரை..!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
மீதமுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 7-ம் தேதி குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளராக முகேஷ் தலால் நிறுத்தப்பட்டார்.
அதைப்போலவே காங்கிரச் சார்பில் முதலில் நிறுத்தப்பட்ட நிலேஷ் கும்பனியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அவருக்கு மாற்றாக சுரேஷ் பத்சலா களம் இறக்கப்பட்டார். அவர் வேட்பு மனுதாக்கலில் போலியாக கெயெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் உண்மை தன்மை இல்லை எனக் கூறியும் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனோடு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்களும் ஒரே நாளில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாஜக சார்பில் போட்டியிட்ட முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கு குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இதனிடையே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் பெற உள்ளதாக காங்கிரஸ் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.





