ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட திருத்த மசோதா தாக்கல்..!
ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஆன்லைன் ரம்மி மூலம் பலர் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் அதற்கு தடை விதித்து தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
அதற்கு கடந்த நவம்பர் மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்த சட்டம் தற்போது மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீட்டுக் கட்டுகள். பகடைக்காய் என பந்தயம் கட்டி பொருள் வைக்கும் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் தடை விதிக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது ஆன்லைன் மூலம் ரம்மி பெருகி விட்டதாகவும் அதற்கும் தடை விதிக்குமாறு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த சட்டம் இயற்றப்படுவது மூலம் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுவதற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்க முடியும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கும் இந்த சட்டம் வழி செய்கிறது.







