--- --:--:-- --

மெகுல் சோக்சியை நாடு கடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அனுமதி..!

7

ரூ.13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப் பிறகு, அவரை நாடு கடத்த அன்ட்வெர்ப் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மெகுல் சோக்சி இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அடுத்த 15 நாட்களுக்குள் பெல்ஜிய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

 

இந்தியாவின் கோரிக்கையின் பேரில் பெல்ஜிய அதிகாரிகள் மெகுல் சோக்சியைக் கைது செய்தது செல்லுபடியாகும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளதாக அறியப்படுகிறது. இந்திய அரசு, மெகுல் சோக்சி நாடு கடத்தப்பட்டால், அவர் மும்பையின் ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் வைக்கப்படுவார் என்று பெல்ஜிய அரசுக்கு உறுதியளித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த உத்தரவு வந்துள்ளது.

 

இதுகுறித்துத் தகவல் அறிந்த வட்டாரம், “இது ஒரு வெற்றி, மெகுல் சோக்சியை நாடு கடத்துவதற்கான முதல் படியாகும். பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்குப் பிறகு, நாடு கடத்தலுக்கு எதிரான அவரது மேல்முறையீட்டை நிராகரித்து முதற்கட்டத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அவர் இப்போது அடுத்த 15 நாட்களுக்குள் இந்த உத்தரவுக்கு எதிராக பெல்ஜிய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்” என்று கூறியது.

 

மெகுல் சோக்சியும் அவரது மருமகனான நீரவ் மோடியும், மும்பையில் உள்ள பிராடி ஹவுஸ் கிளையின் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மோசடியான உறுதிப் பத்திரங்கள் மூலம் ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகப் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கில் தேடப்படுகிறார்கள்.

 

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ) நாடு கடத்தும் கோரிக்கையின் அடிப்படையில் மெஉல் சோக்சி கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். அன்று முதல் அவர் அன்ட்வெர்ப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம், மெகுல் சோக்சியின் நாடு கடத்தல் விசாரணைக்கு சற்று முன்னதாக, பெல்ஜிய நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. சி.பி.ஐ, மெகுல் சோக்சி மீது ரூ. 6,400 கோடி வங்கிக் கடன் மோசடியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

 

மெகுல் சோக்சியை நாடு கடத்தி, இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராகேஷ் குமார் பாண்டே, செப்டம்பர் 4-ம் தேதி பெல்ஜிய அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

 

அந்தக் கடிதத்தில், “மகாராஷ்டிரா அரசின் அறிக்கையின் அடிப்படையில், மெகுல் சோக்சி ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் உள்ள 12-வது பாராக்கில் வைக்கப்படுவார் என்று மத்திய அரசு உறுதியளிக்கிறது. மேலும், அவர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், விசாரணைக் காலத்திலும் தண்டனைக்குப் பிறகும் அவருக்குக் குறைந்தபட்சம் மூன்று சதுர மீட்டர் தனிப்பட்ட இடம் கிடைக்கும் அறையில் வைக்கப்படுவார் என்றும் உறுதியளிக்கப்படுகிறது” என்று பாண்டே தெரிவித்தார்.

 

மேலும், மெகுல் சோக்சி வைக்கப்படும் தடுப்புக் காவலில் சுத்தமான, தடிமனான பருத்திப் பாய், தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் போர்வை ஆகியவை வழங்கப்படும் என்றும் பாண்டே உறுதியளித்தார். “மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ஒரு உலோக சட்டகம் / மரப் படுக்கையும் வழங்கப்படும். போதுமான வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் அனுமதிக்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளைச் சேமிப்பதற்கான வசதிகள் கிடைக்கும்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Right Menu Icon