பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடையா..! முதல்வர் உத்தரவு..!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரொனா தடுப்பு குறித்து ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட் இந்த சவால் மிகுந்த நேரத்தில் மக்களின் உயிர்களை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு முக்கியமானது என்றார்.
முறையான சான்றிதழ் இல்லாமல் இயங்கும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
நவம்பர் 30ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கலாமா என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் டெல்லி உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருவதை கருதி பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி சந்தோஷ் குப்தா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என விளக்கம் அளிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் விளக்கமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 14 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க ஏற்கனவே அந்த மாநில அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






