கொரோனா கொடுமையிலும் கடன் தவணை கேட்டு “டார்ச்சர்”…அவமானத்தில் விவசாயி தற்கொலை!! ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயுமா?
கொரோனா பெருங் கொடுமையால் பரிதவித்துள்ள நிலையில் கடன் தவணை கேட்டு தனியார் வங்கியினர் கொடுத்த டார்ச்சரால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது. விவசாயியின் மரணத்திற்கு காரணமான, கடன் வசூல் நெருக்கடி கொடுத்த தாராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒட்டு மொத்தமாக நாட்டில் அனைவரின் வாழ்வாதாரமும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்பட்டு பலரும் இன்னல்படும் இந்தக் கால கட்டத்தில் வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாதாந்திர தொகையை கட்டாயம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பின்வரும் காலங்களில் செலுத்திக் கொள்ளலாம் என்ற சலுகையை அறிவித்த ரிசர்வ் வங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கடன் வசூலை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
விவசாயி தற்கொலை
“ஆனால் வங்கிகள் தரப்போ இதை அலட்சியப்படுத்தி, வாழக்கையாளர்களை தொந்தரவு செய்து வருவது சகஜமாக நடந்து வருகிறது. சில வங்கிகள் தரப்போ மிரட்டல் தொனியை கையாண்டு, நெருக்கடி கொடுக்கின்றனர். இப்படியான டார்ச்சரால், மன வேதனை அடைந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது”
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமம், குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி (55). அவர் தாராபுரம் நகரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கடந்த 2012 ல் நீண்ட கால விவசாய கடன் பெற்றிருந்தார். பெற்ற கடனை சரியாக செலுத்திய நிலையில், 2017ம் ஆண்டு 1.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அவரது பூமியை மேம்படுத்தி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.
மூன்று இடங்களில் போர்வெல் போட்டும் தண்ணீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை முழுமையாக செலுத்த இயலவில்லை, சிரமத்திற்கு மத்தியிலும் வங்கிக்கு தவணைகளை அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தவணை தொகையையும், அபராத வட்டியுமாக உடனே செலுத்த வேண்டுமென ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகள் நெருக்குதல் அளித்து வந்தனர். கொரோனா காலத்தில் போதுமான வருமானம் இல்லாமல் அவரால் தொடர்ச்சியாக தவணையை செலுத்த இயலவில்லை.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 வாரமாக வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் அவரது தோட்டத்திற்குச் சென்று தொடர்ந்து மிரட்டியுள்ளனர். கேவலமாகவும், தரக்குறைவாகவும் திட்டியுள்ளார்கள். அதோடு அவரது குடும்பத்தினரையும் மோசமான வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளனர்.
இதனால், மனமுடைந்த விவசாயி இராஜாமணி நேற்று செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் அவரை கோவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
கைது செய்ய வேண்டும்
“விவசாயிகள் சங்கத்தினர் கொந்தளித்துள்ளனர்.விவசாயி இராஜாமணி தற்கொலைக்கு காரணமான தாராபுரம் நகர ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளர் மற்றும் கடன் வசூல் அதிகாரிகள் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்”
இவர் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசையும், திருப்பூர் மாவட்ட ஆட்சியரையும் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட பொருளாளர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயி ராஜாமணியில் தற்கொலை சம்பவம் குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவரான கு.செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், குண்டடம் விவசாயி ராசாமணி, தாராபுரம் கிளை ஆக்சிஸ் வங்கியில் வாங்கிய கடனுக்காக,அந்த வங்கி அதிகாரிகளால் ஏற்பட்ட அவமானத்தாலும், கொடுத்த தொல்லையாலும், மன உளைச்சல் ஏற்பட்டு,அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அவரது மரணத்திற்கு வருத்தத்தையும்,
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மரணத்திற்கு காரணம் முழுக்க முழுக்க தாராபுரம் கிளையைச் சேர்ந்த ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகள் தான், அந்த அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறந்த விவசாயி குடும்பத்திற்கு அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் வங்கியில் உள்ள கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், இந்த நடவடிக்கைகள் அரசாலும் அதிகாரிகளாலும் உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஏற்கனவே பல்லடத்தில் இதேபோல் டிராக்டர் கடனுக்காக வங்கி அதிகாரிகள் தொல்லை செய்து ஒரு விவசாயி உயிர் அநியாயமாகப் போய்விட்டது, இது தொடராமல் இருக்க வேண்டும் என்றால், (சாத்தான்குளம் போலவே இதுவும் ஒரு வகையான கொலைதான்) அந்த அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அப்பொழுதுதான் மற்ற அக்கிரமமான அதிகாரிகளுக்கும், இது ஒரு பாடமாக அமையும் கு.செல்லமுத்து தெரிவித்துள்ளார்.






