--- --:--:-- --

“களை கட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்!!” பூ, பழம், பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்..! விலை தான் எக்கச்சக்கமானது!!

23

நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வாகன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக கொண்டாடும் வேளையில் பூ, பொரி, பழங்கள், வாழை மரங்கள் என விற்பனை அமோகமான நிலையில், விலை தான் இரு மடங்கு, மூன்று மடங்காகியுள்ளது.

 

தமிழகத்தில் ஆயுத பூஜையை அனைத்து தரப்பினரும் .பயபக்தியுடன் வெகு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். வீடுகளை தூசி தட்டி சுத்தம் செய்து பூஜை நடத்தி கொண்டாடுவர்.

 

தொழில் நடத்துவோர் தங்கள் இயந்திரங்களை சுத்தப்படுத்தி சந்தனம் குங்குமம் இட்டு மாலையணிவித்து மரியாதை செலுத்துவர், ஊழியர்களுக்கும் இந்த நாளில் போனசுடன், பொரி, சுண்டல், இனிப்புகளை வழங்கி மகிழ்விப்பதும் வழக்கம், வாகனங்கள் வைத்திருப்போர், வாடகை வாகன உரிமையாளர்களும், தங்கள் வாகனங்கைள சுத்தமாக கழுவி அலங்கரித்து பூஜிப்பதும் இந்த நாளில் வழக்கம். இப்படி ஆயுத பூஜை நாளில், பூஜையுடன் கொண்டாட்டங்கள் களை கட்டும்.

 

இதனால் கடந்த ஒரு வாரமாகவே ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகளில் பலரும் மும்முரம் காட்டி தேவையான பூ, பழங்கள், பொரி, வாழைமரம், பூசணிக்காய் , சந்தனம், குங்குமம், அலங்கார தோரணங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க ஆரம்பித்ததால் விற்பனை களைகட்டியது. கடைசி நாளான நேற்றும் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

 

ஆயுத பூஜைக்கு விற்பனை படு விறுவிறுப்பாக இருந்த அதே வேளையில் பூ, பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை தான் இரு மடங்கு, மூன்று மடங்காக இருந்தாலும் மக்கள் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

 

இருந்தாலும் கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் இந்த ஆண்டு ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் படு விமர்சை என்று கூற முடியவில்லை என்கின்றனர் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் . இதற்கெல்லாம் கொரோனா தான் காரணம். வழக்கமாக ஆயுத பூஜைக்கு முன்னரே போனஸ் பட்டுவாடா தூள் பறக்கும்.

 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக சில மாதங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டதை காரணம் காட்டியும், தொழில் நஷ்டம் எனக் கூறியும் போனஸ் பற்றிய பேச்சையே எடுக்காமல் இன்னும் பல தொழில் நிறுவனங்கள் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல தொழிற்சாலைகளில் இந்த ஆண்டு போனஸ் கிடைக்குமா? என்பதே சந்தேகமாக உள்ளது என்றும் தொழிலாளர்கள் புலம்புவதையும் காண முடிகிறது.

Leave a Reply

Right Menu Icon