கர்நாடக மாநிலம் பெலகாவியில் அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்சை தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதியுடன் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்த நிலையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் கட்டடத்தின் மீது கற்களை வீசியதுடன் மருத்துவமனை ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். பின்னர் ஆத்திரம் அடங்காமல் சாலைக்கு வந்தவர்கள் அத்தாணி பகுதியிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு தீ வைத்தனர்.
தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்து வன்முறை கூட்டத்தை கலைக்க போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.








