போடியில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் எம்பி கார் மீது தாக்குதல்!
போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டியில், தேனி தொகுதி எம்.பி.யும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை, தேனி எம்.பியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்வெல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் பார்வையிட்டு வந்தார்.
போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாளகவுண்பட்டி கிராமத்திற்குச் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரவீந்திரநாத்துடன் சென்ற அதிமுகவினரும், பதிலுக்கு திமுகவினருடன் வாக்குவாதம் செய்தனர்; ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
இதில், அங்கிருந்த சிலர், கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டனர். இதில், எம்.பி. ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. எனினும், எவ்வித காயமுமின்ரி ஓ.பி.ரவீந்திரநாத் தப்பினார். இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






