டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்! மாணவர்கள் போராட்டம்..கனிமொழி ஆதரவு
போராடும் மாணவர்கள் மீது மத்திய அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுவது மிக மோசமான செயல்பாடு என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜேன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி போராட்டத்திற்கு திமுக முழுமையாக ஆதரவு தரும் எனக் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்ன போராட்டம் நடத்தினாலும் மக்களுடைய குரலை ஒருபோதும் கேட்பதில்லை என்ற மத்திய அரசின் போக்கு மிகவும் மோசமானது என விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டத்திலிருந்து திமுக பின்வாங்காது எனவும் கனிமொழி தெரிவித்தார்.

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தஞ்சாவூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.





