கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு பணி: மதுரையில் போலீசாருடன் வாலண்டியராக வலம் வந்த நடிகர் சசிகுமார்!!
கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மதுரையில் போலீசாருடன் இணைந்து நடிகர் சசிகுமார் வாலண்டியராக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அத்துனையும் போர் போன்ற சூழலில் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்தத் தொற்று மேலும் பரவாமலிருக்க, பொது வெளியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்; சமூக இடைவெளி அவசியம் என்பது தான் ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் உலகின் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளைப் போட்டு, மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்துள்ளனர்.
ஆனால் மக்களோ ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றுவதும், பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் சேருவதும் தொடர்கிறது . இதனால் தமிழகத்தில் போலீசார், ஏக கெடுபிடி காட்டி மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்ய படாத பாடுபட்டு வருகின்றனர். மேலும்
வீட்டுக்குள்ளேயே இருப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வழிகளில் பொதுமக்களிடம் விளக்கிக் கூறியும் வருகின்றனர்.
மேலும் திரைத் திரையில் உள்ள பிரபலங்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.மேலும் நாம் காட்டும்அலட்சியம் சமூகத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களையும், பதிவுகளையும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சசிகுமார் தாம் பிறந்த மதுரை மண்ணில் காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசாருடன் இணைந்து,இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் வலம் வந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சசிகுமார், நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு… ஆனா, நமக்காக இவங்க (காவல் துறையினர்) வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க.. நாமதான் ஒத்துழைக்கணும்… என பஞ்ச் வைத்து அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், கொரோனா தொடர்பாக மதுரை போலீசாருடன் இணைந்து சசிகுமார் பேசியுள்ள வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சசிகுமார் பேசுகையில், நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் தங்களது வீட்டை விட்டு வெளியே வந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்காக நாம் வீட்டிலிருந்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சசிகுமார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, மக்களுக்கு அறிவுரை கூறுவது மற்றும் அவரது பேச்சுக்களுடன் மதுரை போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.







