“அண்ணாத்த”..! ரஜினியின் புதிய படத்தின் பெயர் இது தான்!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திற்கு “அண்ணாத்த” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பொங்கல் வெளியீடாக தர்பார் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் சரியாக ஓடவில்லை என விநியோகஸ்தர்கள் போர்க்குரல் எழுப்ப இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்துக்கு சன் பிக்சர்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. ரஜினியின் 168-வது படம் இதுவாகும். தர்பார் பட சர்ச்சையால் இந்தப் படத்தில் நடிக்க ரஜினிக்கு முதலில் பேசப்பட்ட சம்பளத்தில் பாதியாக குறைக்க சன் பிக்சர்ஸ் நெருக்கடி கொடுத்தது. இதற்கு ரஜினியும் சம்மதிக்க இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. டி.இமான் இசையில் சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டாமல் இருந்த நிலையில், படத்தின் பெயரை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. படத்தின் பெயர் என்ன தெரியுமா? “அண்ணாத்த”. இதுவும் பேச்சு வழக்கில் நல்லாத்தேன் இருக்கு.





