திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய 7 பேரும் உயிரிழப்பு..!
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது. அடிவாரத்தில் வசித்து வந்த மக்கள் சுதாரிப்பதற்குள் சில அசம்பாவிதங்கள் அரங்கேறி விட்டன.
மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் 9வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டன. மலையிலிருந்து பாறைகள் மற்றும் சரளை மணல் குவியல்கள் ஒட்டுமொத்தமாக சரிந்து வந்ததில் அடிவாரப் பகுதியிலிருந்த வீடுகள் மீது விழுந்து சிதிலமடைந்தன.
சுமார் 40 டன் எடை கொண்ட பெரும் பாறை ஒன்று சரிந்து வந்து அபாயகரமான வகையில் நின்றுள்ளது.மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து போனது. மேலும், 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர் ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது.
அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். மண் சரிவு ஏற்பட்ட போது ராஜ்குமார் வீட்டருகே இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து அவரது வீட்டு கதவை அடைத்துக் கொண்டுள்ளது. இதனால் அவர்களால் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர். அதன் பின் சரிந்து வந்த மண் மற்றும் பாறைகள் வீட்டை முற்றிலுமாக மூடியதால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமாரின் செல்போன் சுமார் ஒரு மணி நேரம் வரை இணைப்பில் இருந்துள்ளது. அதன்பின் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். ஆனால், மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பாறைகளுக்கு நடுவே சிக்கிய சடலங்களை மீட்க ஜெசிபி கொண்டு பாறைகளை அகற்றும் பணி தொடங்கியது மிகுந்த சிரமத்திற்குப் பின் மற்ற இரு சடங்களும் மீட்கப்பட்டன. இதன் மூலம் மண்ணில் புதைந்த ராஜ்குமார், மீனா, கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா ஆகிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து மலைஅடிவாரப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடியிருப்பு வாசிகளையும் மழைப்பொழிவு முடியும் வரை அங்கிருந்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். நிலச்சரிவு ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளை கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத மழைப் பொழிவால் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் சிக்கி 7 உயிர்கள் பறிபோன சம்பவம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





