அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, மாயாவதிக்கு அமித்ஷா சவால்!
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தன்னுடன் பொது மேடையில் விவாதிக்க தயாரா என ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்தியா இரண்டாக பிரிந்ததற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து திருவாரூரில் இஸ்லாமிய அமைப்பினர் பேரணியாக சென்றனர். கொரடாச்சேரியில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெண்ண வாசல் பகுதியில் இருந்து பேரணியாக சென்று கொரடாச்சேரி கடை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன. இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொரடாச்சேரியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் கண்டன பேரணி நடத்தினர். அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடியே பேரணியாக சென்றனர். சுதேசி மில் அருகே புறப்பட்ட பேரணி இறுதியாக தலைமை தபால் நிலையம் சென்றடைந்தது.

இதேபோல சிவகங்கையில் அனைத்து ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அம்பேத்கர் சிலையிலிருந்து நீண்ட கொடியை கைகளில் ஏந்தி ஊர்வலமாக வந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






