--- --:--:-- --

மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சரானார் அஜித் பவார்..!

4

காராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தன்னை ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்து கொண்டார். இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மாநிலத்தின் 2ஆவது துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

 

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்ரே சிவசேனா உள்ளது. பாஜவுடன் முரண்பட்டு உத்தவ் தாக்ரே மகாவிகாஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மூலமாக அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது.

 

ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் பெருவாரியான எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்து கடந்தாண்டு ஆட்சி அமைத்தனர். எதிர்க்கட்சி தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இருந்து வந்தார். இந்நிலையில், அம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிவசேனா- பாஜக கூட்டணியில் இன்று இணைந்து கொண்டார்.

 

அம்மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திடீர் பதவியேற்பு விழாவில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அம்மாநில ஆளுநர் ரமேஷ் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவாருடன் சேர்த்து 9 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர்.

 

இந்த விழாவில் மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ள நிலையில், கட்சி தலைமையின் நடவடிக்கையின் மீது அஜித் பவாருக்கும் சமீப காலமாக அதிருப்தி நிலவியது.

 

கட்சியின் செயல் தலைவராக சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே நியமிக்கப்பட்டார். அப்போது அஜித் பவார் தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பமில்லை, கட்சி பதவியில் தான் விருப்பம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அதிரடி நடவடிக்கையாக அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

Right Menu Icon