--- --:--:-- --

நள்ளிரவு வரை நீடித்த அதிமுக – பாஜக பேச்சு! தேமுதிகவுடான பேச்சில் இழுபறி நீடிப்பு

admk

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பின்னர் அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

 

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்வதில், அதிமுக- திமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது, பாமகவுக்குத்தான். அந்த கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

 

அடுத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா, தே.மு.தி.க கட்சிகலுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கினர். அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை, பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பா.ஜ.க. தமிழக தலைவர்கள் நேற்று காலை சந்தித்து பேசினர்.

 

இந்த சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். காரைக்கால், விழுப்புரம் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, பா.ஜ.க. தரப்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி, பா.ஜ.க. பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

இந்த சந்திப்பில், அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக, பா.ஜ.க. தரப்பில் 30 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், எனினும் அ.தி.மு.க. தரப்பில் 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. பாஜக தரப்பில், கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகள் கோரப்பட்டுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு எண்ணிக்கை தொடர்பாக, இன்று இறுதி முடிவு வெளியாகலாம் என்றும் தெரிகிறது. இதனிடையே, சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

 

மறுபுறம், அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று முன்தினம் ஆலோசித்தனர். இந்த சந்திப்பு 2ம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. பா.ம.க.வுக்கு நிகராக தங்களுக்கு தொகுதிகளை அளிக்க வேண்டும் என்று, தே.மு.தி.க. தரப்பில் வலிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தையும் நள்ளிரவு வரை நீடித்தது; எனினும் தேமுதிகவுடனான பேச்சில் இன்னமும் ஒருமித்த முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலை நீடிப்பதாக, தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

அதிமுக அணியில் ஒரே நேரத்தில் பாஜக, தேமுதிக கட்சிகளுடன் நள்ளிரவு வரை பேச்சு வார்த்தை நடந்தது, தேர்தல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon