மீண்டும் விலை அதிகரித்த சமையல் காஸ்! தேர்தல் அறிவித்தும் குறையவில்லை விலை!!
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விலை ஏற்றம் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது; இதனால், நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இறக்குமதிச் செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்குள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கின்றன. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மட்டும், மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் என இரண்டு முறை விலை மாற்றியமைக்கப்படும். ஆனால், கடந்த பிப்ரவரி பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்தது. இதற்கிடையே, தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இனி விலை உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, மீண்டும் சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 விலை உயர்ந்த நிலையில் மார்ச் மாதத்தின் முதல் நாளிலேயே, ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும், பெட்ரோல் – டீசல் விலை மட்டும் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையே தொடர்ந்தது. நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி பெட்ரோல் – டீசல், சமையல் காஸ் விலை உயராது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இருந்தனர். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தி இருப்பது, பொதுமக்களை அதிர்ச்சியுறச் செய்துள்ளது.
இது இல்லத்தரசிகள், நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம், நிச்சயம் வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.






