அமலாக்கத்துறை தலைமையகத்தில் நடிகை ஜாக்குலின் நேரில் ஆஜர்..!
200 கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
பல்வேறு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவருடன் தொடர்புடையதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறான சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாக்குலின் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.






