ராணுவத்தளபதியை குறிவைத்து சதியா? குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் பகீர் பின்னணி!
ஒட்டுமொத்த இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது, குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து. இதில் பயணம் செய்த இந்திய ராணுவ முப்படைத்தளபதி பிபின் ராவத் நிலை என்னவென்று தெரியாத நிலையில், அதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்டனர். இந்த கோர விபத்து நடந்தது எப்படி? இதில் சர்வதேச சதி உள்ளதா? அல்லது இயற்கையான விபத்தா? இதோ, உங்களுக்காக சிறப்புச் செய்திகள்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக இருந்து வருபவர் பிபின் ராவத். இவர், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரியில், இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்காக, தனது மனைவி, மகள் உள்பட 14 பேருடன் இன்று கோவை சூலூர் விமானதளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு, அதிநவீன Mi-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்.
சூலூரில் இருந்து 11.45 மணியளவில் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பகல் 12:20 மணியளவில், குன்னூர் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்தபடி ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. உடனடியாக மேலும் பயங்கர தீப்பிழம்புடன் ஹெலிகாப்டர் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.

விபத்து நடந்த பகுதி, குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்ற வனப்பகுதியாகும். இங்கு அரசின் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், நண்பகல் வேளையில் பயங்கர சப்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர். மலைப்பகுதிக்குள் இந்தச் சத்தம் கேட்ட உடன் புகையும் நெருப்பும் மேலெழுந்து வந்துள்ளது. அவர்கள் யாருக்கும் விழுந்தது ஹெலிகாப்டர் என்பது தெரியாது. அதற்குப் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்துள்ளனர்.
ஆங்காங்கே சிதறிக் கிடங்க உடல்களை பார்த்து, மலைப்பகுதி மக்கள் பதறிப் போயினர். உடனடியாக தீயை அணைக்கலாம் என்றால், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ராணுவத்திற்காக வீரியம் மிக்க பிரத்யேக பெட்ரோல் என்பதால், தீ அணையாமல் ஒருமணி நேரம் வரை எரிந்து கொண்டிருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் கூறினர். வனப்பகுதி என்பதால், மீட்பு வாகனங்கள், தீயணைப்பு வண்டிகள் செல்வதில் சிக்கல் இருந்துள்ளது. இதனால், மீட்புப்பணிகள் தாமதமானதாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் தகவல் அறிந்த ராணுவத்தின் விபத்து மீட்புக்குழுவினர், தீயணைப்பு குழு, மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதே நேரம், டெல்லிக்கு தகவல் பறக்க, பிரதமர் மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவசர அவசரமாக அடுத்தகட்ட ஆலோசனை நடத்தினர்.

இறங்க வேண்டிய இடத்தினை 10 நிமிடங்களில் நெருங்கிவிடும் தூரத்தில்தான், இந்த கோர விபத்து நடந்ததுள்ளது. இதில் பயணித்த முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் நிலை என்னவானது என்று அதிகாரபூர்மாக அறிவிக்கப்படவில்லை. அதே நேரம், ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்டதாக, நீலகிரி ஆட்சியர் அமிரித் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டு ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முப்படை தலைமை தளபதி அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவரின் நிலை என்னவென்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. ராணுவ விவகாரம் என்பதால், பாதுகாப்புத்துறை அமைச்சகம் தான் முறைப்படி அறிவிக்கும்.
இதனிடையே, நேரில் பார்த்தவர்களில் சிலர் கூறுகையில், குன்னூர் காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, கடும் பனிமூட்டம் இருந்ததாகவும், ஹெலிகாப்டர் தள்ளாடியதாகவும் நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறினர். அதன் பின்னர் பயங்கர சத்தத்துடன் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து வெடித்து சிதறியதாக, அவர்கள் மேலும் கூறினர்.
அதே நேரம், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அதி நவீன ரஷ்ய தயாரிப்பாகும். இதில் 36 பேர் பயணிக்க முடியும். 13 ஆயிரம் கிலோ எடையை சுமக்கக்கூடியது. அதிநவீன ரேடார் வசதிகள் கொண்டுள்ளது. எந்தவிதமான காலநிலை, மோசமான வானிலையையும் சமாளிக்கும் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. எனவே, விபத்துக்கு வானிலை காரணமாக இருக்காது என்றும், மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, மரக்கிளையில் சிக்கியே விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்தது சாதாரணமான நபர் அல்ல, விவிஐபி; இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். எனவே, இந்த விபத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருக்குமோ என்ற சந்தேகத்தையும் பாதுகாப்புத்துறை ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். விபத்து பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள ராணுவம், ஒவ்வொரு அங்குலமாக ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ராணுவ விசாரணைக்கு பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.





