நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டல்..!
சென்னை அடையாறில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருக்கக்கூடிய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு நடிகர் விக்ரமின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்து தொடர்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்த அதிகாரிகள் நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக அடையாறு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் உடனடியாக நடிகர் விக்ரம் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீடு, வீட்டின் வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் இது வெறும் வதந்தி என தெரிய வந்துள்ளது.
கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நபர்களுடைய செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






