இன்ஷூரன்ஸ் தொகைக்காக விபத்து நாடகம்? விதி மீறும் டூ வீலர்களால் அதிகரிக்கும் விபத்து…கண்டுகொள்ளாத போலீசாரே முழுப்பொறுப்பு!!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி அதிவேகத்தில் பறப்பதால், கார், வேன் போன்ற வாகனங்களில் செல்வோர் பதற்றமும் பீதியும் அடைகின்றனர். அடிக்கடி கனரக வாகனங்கள் மீது இரு சக்கர வாகன ஓட்டிகள் மோதுவது, வாகனக் காப்பீடு தொகையைப் பெற, ரகசியக் கூட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கார் உரிமையாளர்கள் எழுப்பியுள்ளனர்.
உலக நாடுகளில் உள்ள வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதமே இந்தியாவில் உள்ளது. இருப்பினும் வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் அதிகளவில் சாலை விபத்து நடக்கிறது. தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில், சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது.
சாலை விபத்துகளில் விதிமீறும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் பங்கு மிக அதிகளவில் உள்ளது. மொபைல் போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அனுமதிக்கப்பட்ட 2 பேர் என்ற எண்ணிக்கையைவிட 2 பெரியவர்கள், 2 சிறியவர்கள் என்று 4 பேர் பயணிப்பது, முறையாக வாகனங்களை சர்வீஸ் செய்யாமல் பயணிப்பது, தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களுக்கு இணையாக அதிவேகத்தில் செல்வது போன்றவை, இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதற்கு காரணமாகிறது.
இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு கிடுக்கிப்பிடிகளை போட்டு வருகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணம், சென்னையை குறிப்பிடலாம். சென்னையில் வாகன ஓட்டிகள் இனி 40 கி.மீ .வேகத்திற்கு மேல் வாகனம் இயக்கினால் வழக்கு பதியப்படும் என்று போக்குவரத்து போலீசார் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலரின் அலட்சியப் போக்கு, கார், பஸ் போன்ற வாகனங்களில் செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு உதாரணமாக திண்டுக்கல் மாவட்டம், பாலம்ராஜக்கப்பட்டி, ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடந்த சாலை விபத்தினை குறிப்பிடலாம்.
சம்பவத்தன்று, இரு சக்கர வாகனம் ஒன்றில் கணவன் – மனைவி மற்றும் இரு குழந்தைகள், ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளுக்கு புறம்பாக பயணித்துள்ளனர். அத்துடன், அவர்கள் ஹெல்மெட் அணியவும் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்ற இவர்கள், திடீரென முன்னால் சென்ற கார் ஒன்றின் பின்புறம் மோதும் அளவுக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென முன்பிரேக் பிடிக்க, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியபடி கீழே விழுந்தது, அதே வேகத்தில் காரின் பின்பக்கம் லேசாக இடித்து நின்றது.
இந்த விபத்தில் கீழே விழுந்ததில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, முன்னால் காரில் சென்று கொண்டிருந்தவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்ததோடு, அவர்கள் வரும்வரை காத்திருக்காமல் தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
பொதுவாக, வாகனம் விபத்தில் சிக்கினால் கனரக வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் நிற்கவே தயங்குவதுண்டு. காரணம், விபத்துக்கு யார் காரணம் என்று புரியாமலேயே கனரக வாகனம் ஓட்டி வந்தவரை சூழ்ந்து கொண்டு எல்லோரும் சண்டைபோடுவதே வழக்கமாக உள்ளது. இன்னும் சிலர், யார் பக்கம் தவறு என்று பார்க்காமல், டிரைவரை தாக்க முற்படுவதுண்டு. ஆனால், ரெட்டியார்சத்திரத்தில் நிழந்த விபத்தில், தனது கவனக்குறைவால் கீழே விழுந்து, தனது காரின் பின் பகுதியிலும் மோதிய வாகன ஓட்டியை, காரில் வந்தவர்களே அழைத்துச் சென்ற சம்பவம், அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. கார் உரிமையாளரின் செயலை, பலரும் பாராட்டினர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் சிலரின் அஜாக்கிரதை குறித்து கார் உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், “இரு சக்கர வாகனங்களில் செல்லும் சிலர், கண் முன் தெரியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். இதனால், விதிமுறைகளின்படி வாகனம் ஓட்டும் கார், வேன், பஸ் ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்; விபத்தில் சிக்குகின்றனர். தேவையற்ற விபத்துகளால் வழக்கு, கோர்ட் என்று ஏறி இறங்க வேண்டியுள்ளது.
இன்னும் சில இடங்களில் லேசான விபத்து ஏற்படுத்தி, அதை சாக்காக வைத்து காசு பெறும் வழக்கம் உள்ளது. காரில் இருப்பவர் வசதியான நபர் என்று தெரிந்து கொண்டால், பெரிய தொகையை பேரம் பேசுவது, வழக்குப் போடாமல் இருக்க போலீசார் பணம் கறப்பது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிடம் இருந்து வாகன விபத்து காப்பீடு தொகையைப் பெற செட் அப் நாடகம் போடும் செயல்களும் நடப்பதாக தெரிகிறது. இதற்கு உள்ளூர் போலீசாரும் சிலர் கூட்டுச்சேர்ந்து, நன்றாக காசு பார்ப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்தியாவில் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. அதில் இருசக்கர வாகனங்கள் அதிக பங்கு வகிக்கின்றன. எனவே, காவல் துறையினர் தங்களின் விதிமுறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகளை கடுமையாக தணிக்கை செய்து, ஹெல்மெட் அணியாதது, அதிகம் பேருடன் பயணிப்பது போன்ற விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்” என்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுவது என்றாலே, கண்ணை மூடிக் கொண்டு பறக்க வேண்டும் என்றில்லை. இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல, தனது உயிருக்கும் ஆபத்து என்பதை, விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும். போக்குவரத்துப் போலீசார், இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்; விபத்து இல்லாத பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





