--- --:--:-- --

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை கைவிடுங்கள்- மு.க. ஸ்டாலின்

3

தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்களை திமுகவினர் தவிர்க்குமாறு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். எமர்ஜென்சி காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கொச்சைப்படுத்தி அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

அமைச்சரின் தொகுதியான ஆவடியில் மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அமைச்சர் க.பாண்டியராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

திமுகவினரின் போராட்டம் காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள அமைச்சர் க.பாண்டியராஜன் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் அமைச்சர் க.பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்குமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எமர்ஜென்சியை எதிர்த்த காரணத்தால் தான் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் நிரம்ப உள்ளதாக குறிப்பிட்டார்.

ஆனால் சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுகவின் தியாக வரலாற்றை அரசியல் லாப நோக்கில் வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத அமைச்சர் பாண்டியராஜன் முயற்சிக்கிறார் என்றும் சாடியுள்ளார். தியாகம் செய்து அரசியலுக்கு வந்து மக்கள் தரும் பதவி, பொறுப்புகளை அடைந்தவர்களுக்கு தான் தியாகத்தின் பக்குவம் புரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல் என்ற திருவள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்பவும் மறப்போம் மன்னிப்போம் என்ற மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி கற்றுத்தந்த படங்கள் வழியிலும் நிற்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon