கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த பழங்குடி மாணவி..!
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதற்கு பலனாக அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையிலும் இடம்பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் மேலும் ஒரு மாணிக்கமாக தன்னை இணைத்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இன மாணவி கவிதா.தண்டராம்பட்டு அடுத்த உடையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா பட்டு – பூங்கொடி தம்பதியின் மூன்று பிள்ளைகளில் இளையவர் கவிதா.
ஏற்காடு பகுதியில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்த கவிதா, புளியம்பட்டி பகுதியில் உள்ள ஏகலைவா அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த போது தந்தை ராஜா பட்டு காலமானார். குடும்பத்தில் வறுமை மேலும் நுழைவதற்கு இடம்தர விரும்பாத தாய் பூங்கொடி, பிள்ளைகளுக்காக குவைத் நாட்டிற்கு சென்று, வீட்டு வேலை செய்து வருகிறார்.
மனித சதையை உண்ணும் பழத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா.?
மனித சதையை உண்ணும் பழத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா.?
இதனால் பாட்டி அரவணைப்பில் வளரும் கவிதா, தகப்பனின் மறைவு, தாயின் பிரிவிலும், மனம் தளராமல் கல்வியில் கவனமாக இருந்துள்ளார். இதனை கண்டு பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து ஊக்கமளித்துள்ளனர்.
இதனால் பள்ளிக்கல்வியில் கவனம் செலுத்தியதோடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்திக்கொண்டார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 385 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்ற கவிதாவுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து உறுதுணையாக இருந்து, செங்கல்பட்டில் உள்ள உயர் கல்வி வழிகாட்டுதல் முகாமிற்கு அவரை அனுப்பி வைத்தனர்.
இந்திய கடல்சார் கல்வியை தேர்ந்தெடுத்து ஆறு மாதம் பயிற்சி பெற்று, போட்டித் தேர்வு எழுதிய கவிதா, தேசிய அளவில் தரவரிசை பட்டியலில் 18,806 ரேங்க் பெற்றார். இதனால் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பி.டெக் கடல்சார் கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் குறித்த படிப்பினை அவர் தேர்வு செய்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் இணையும் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமையை கவிதா பெற்றுள்ளார்.





