சாமிநாதனுக்கு வெயிட்டான போஸ்ட்! அறிவாலயம் போட்ட அதிரடி கணக்கு.. திருப்பூர் திமுகவுக்குள் தீருமா பிணக்கு?
திருப்பூர் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனுக்கு, திமுகவில் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், திருப்பூர் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் சீட் அவருக்கு உறுதியான நிலையில், தினேஷ்குமார், இல. பத்மநாபனின் நிலை என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்…
கொங்கு மண்டலத்தில், குறிப்பாகத் திருப்பூரில் தி.மு.க.வின் அரசியல் காய் நகர்த்தல்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைமை, உள்ளூர்க் கோஷ்டிப் பூசல்களைத் தீர்க்கவும், எதிர்காலத் தேர்தல் வியூகங்களை வகுக்கவும் ஒரு ‘வெயிட்டான’ கணக்கைப் போட்டிருக்கிறது. அதன் அதிரடி நகர்வுதான், அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்குக் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது!

அமைச்சர் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பதவி, வெறும் கெளரவம் மட்டுமல்ல; அது கொங்கு மண்டலத்தின் அரசியல் சமன்பாட்டோடு பிணைக்கப்பட்ட ஒன்று. கட்சி சீனியரான சாமிநாதனுக்கு, ஆரம்பத்தில் செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை என ‘வருவாய் தராத’ துறைகள் ஒதுக்கப்பட்டதில் அவருக்கு ஒரு சிறு வருத்தம் இருந்துவந்தது உண்மை. “கொங்கு மண்டலத்தில் எனக்கான உரிய கெளரவம் கிடைக்கவில்லையே” என அவர் நினைத்த வேளையில், கட்சித் தலைமை அவருக்கு ‘பம்பர் பரிசை’க் கொடுத்திருக்கிறது.
முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் ஏற்பட்ட அந்த இடத்தைக், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய கட்டாயம் தலைமைக்கு இருந்தது. இந்தச் சமூக ரீதியான சமன்பாட்டைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மு.பெ. சாமிநாதன், தனக்கே அந்தப் பொறுப்பு வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்.
இங்கேதான் இன்னொரு ‘சண்டமாருதக்’ கணக்கும் ஒளிந்திருக்கிறது. ஈரோட்டைச் சேர்ந்த முத்துசாமி, செந்தில்பாலாஜி போன்ற கொங்கு தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் பலர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள். ஆனால், சாமிநாதன் தி.மு.க.வில் தொடக்கத்தில் இருந்து பயணித்தவர். இந்த ‘உண்மையான தி.மு.க.’ என்ற அடையாளமும், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்ததும், அவருக்குக் கூடுதல் பலமாக அமைந்தது.
அதேவேளையில், பாரதிய ஜனதாவோ, வேறு உத்தியை கையாண்டது. கொங்கு மண்டலத்தில் பாஜக அடையாளமாக இருந்து வந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, நாட்டின் 2ஆவது உயரிய பதவியான துணை ஜனாதிபதி பதவியை தந்துள்ளது. இதன் மூலம், திருப்பூரில் தனக்கு ஒரு ‘ஆதரவு அலையை’ ஏற்படுத்திக்கொண்டது. இதற்குச் சவால் விடும் வகையில், மாவட்டத்தின் சீனியர் பிரமுகர் ஒருவரை உயர் பதவிக்கு அமர்த்தியாக வேண்டிய கட்டாயம் தி.மு.க. தலைமைக்கு இருந்தது. இந்த அனைத்துக் கணக்குகளின் மொத்த உருவமாக, சாமிநாதனுக்குத் துணைப் பொதுச் செயலாளர் பதவி வந்து சேர்ந்திருக்கிறது. இதை, அமைச்சா் சாமிநாதன் தனக்குக் கிடைத்த ஒரு கௌரவமாக மட்டுமே பார்க்கிறார்.
அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்குப் புதிய பதவி வந்தபோதிலும், உள்ளூர்ப் பூசல்களை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் தி.மு.க.வுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் நடந்த ரகளையே இதற்கு முக்கியக் காரணம்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்சி அமைப்புரீதியிலான மாற்றம் செய்யப்பட்டபோது, மு.பெ. சாமிநாதனின் தீவிர ஆதரவாளரான இல. பத்மநாபன் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி நிர்வாகிகள் ‘பத்மநாபனை மாற்றியே ஆக வேண்டும்’ என்று தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ‘ஒன் டு ஒன்’ கூட்டத்தின்போது, பல முக்கிய நிர்வாகிகள் இந்த அதிருப்தியை நேரடியாகக் கடிதமாகவும் கொடுத்திருந்தனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கோஷ்டிப் பூசல் நீடிப்பது கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த மு.க. ஸ்டாலின், ஒரு சமரச முடிவுக்கு வர வேண்டியிருந்தது. இதற்காக, சாமிநாதனை அழைத்துப் பேசியுள்ளார்.
விஷயம் அறிந்த சாமிநாதன், “எனக்குத் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பைக் கொடுங்கள். என்னிடம் உள்ள கிழக்கு மாவட்டத்துக்கு இல. பத்மநாபனைச் செயலாளராக நியமித்துவிடுங்கள். தெற்கு மாவட்டத்துக்கு மட்டும் அமைச்சர் சக்ரபாணி யார் கை காட்டுகிறாரோ, அவருக்கே கொடுத்துவிடுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று ஒரு ‘டீலை’ போட்டுவிட்டார்.
சாமிநாதனின் யோசனை, முதல்வர் ஸ்டாலினுக்கும் சரியென பட்டது. இல. பத்மநாபனைத் தெற்கு மாவட்டப் பொறுப்பில் இருந்து விடுவித்து, சாமிநாதன் வகித்த திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமித்தது. பத்மநாபன் வகித்த தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு, மண்டலப் பொறுப்பாளரான சக்ரபாணியின் ஆதரவாளரான கே. ஈஸ்வரசாமிக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம், உடுமலை-மடத்துக்குளம் நிர்வாகிகள் மத்தியில் நிலவிய அதிருப்தியைத் தீர்த்து, தெற்கு மாவட்டத்தில் சக்ரபாணியின் கட்டுப்பாட்டை உறுதி செய்திருக்கிறது அறிவாலயம். அதே சமயம், தனது ஆதரவாளரான பத்மநாபனுக்கு வேறு ஒரு மாவட்டச் செயலாளர் பொறுப்பைப் பெற்றுத் தந்ததன் மூலம், சாமிநாதனும் மகிழ்ச்சியாகியிருக்கிறார். இதுதான் அறிவாலயம் போட்டிருக்கும் ‘டபுள் ஆக்ஷன்’ கணக்கு! சாமிநாதனுக்கு உயர் பதவி கிடைத்ததன் மூலம், வருகிற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
மற்றொருபுறம், திருப்பூர் மேயராக உள்ள தினேஷ் குமார், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் திருப்பூர் வடக்கு தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஏற்கெனவே தே.மு.தி.க.வில் இருந்தபோது போட்டியிட்டு, நூலிழையில் வாய்ப்பைத் தவறவிட்டவர் இவர். தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட தினேஷ் குமாருக்கு, இம்முறை சீட் கிடைத்துவிடும் என்பது 99.9% உறுதி என்கிறது கட்சி வட்டாரம்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செல்வராஜ், இம்முறையும் தனக்கு சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில், கடைசி இரண்டு ஆண்டுகள் குடும்ப விசேஷங்கள் ஒரு புறம் இருக்க, கட்சிப் பணிகளிலும் கண்ணும் கருத்துமாக செயலாற்றி வருகிறாா். தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், இவருக்கும் சீட் கிடைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்படுகிறது.
மொத்தத்தில், மு.பெ. சாமிநாதனுக்கு ‘வெயிட்டான’ பதவி கொடுத்து, அவருடைய ஈகோவைத் தனித்தது தி.மு.க. தலைமை. அதே சமயம், இல. பத்மநாபனை இடமாற்றம் செய்து, தெற்கு மாவட்டத்தின் பிணக்கைத் தீர்த்து, அங்குப் புதிய நிர்வாகியை நியமித்ததன் மூலம், தேர்தல் நேரத்தில் ஏற்படவிருந்த மிகப் பெரிய உள்ளூர்ப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தி, திருப்பூர் கோட்டையைத் தயார் செய்துவிட்டது அறிவாலயம்.
இந்த அதிரடிக் கணக்கு, வரும் தேர்தலில் திருப்பூர் மாவட்ட தி.மு.க.வுக்கு வெற்றியைத் தேடித் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






