விஜய் மற்றும் பாடகர் வேல்முருகன் மீது போலீஸில் புகார்!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் பாடல் பாடிய பாடகர் வேல்முருகன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி கட்சியைத் தொடங்கினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரமாக இறங்கிய தவெக தலைவர் விஜய் திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக மக்கள் சந்திப்புக்குச் சிக்கல் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தனது பரப்புரையை விஜய் தொடங்கி உள்ளார். இந்நிலையில் தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது பாடகர் வேல்முருகனின் இசை கச்சேரி நடைபெற்றது. இதில், விஜய் உற்சாகமாக நடனமாடினார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் பாடல் பாடிய பாடகர் வேல்முருகன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விழாவில், மருதமலை மாமணியே முருகையா என்ற முருகன் பாடலை அவமதித்து இழிவுபடுத்திப் பாடிய பாடகர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாநகரக் காவல்துறையில் வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் அளித்துள்ளார்.
முருக பக்திப் பாடலை அரசியல் ரீதியாகத் திரித்துப் பாடி முருக பக்தர்கள் மனம் புண்படும்படி நடந்துகொண்ட பாடகர் வேல்முருகன் மற்றும் அவருக்குத் தூண்டுதலாக இருந்த தவெக தலைவர் விஜய், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், முருக பாடலைக் கேலி செய்து மத உணர்வைப் புண்படுத்தி, மத மோதலைத் தூண்டி சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கும் வகையில் தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் முருகர் பாடல் அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.





