நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில், நாளை (22) தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அது 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல், வருகிற 26ஆம் தேதி வரை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





