வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (30-10-2025) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (31-10-2025) காலை அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வடக்கு-வடகிழக்கு திசையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக குஜராத் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், குஜராத்- வடக்கு கொங்கன் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு – வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.






