9 வயது சிறுவனை கம்பால் அடித்து சித்திரவதை செய்த காப்பக ஊழியர்கள்..!
சேலத்தில் உள்ள மனநல காப்பகத்தில் ஒன்பது வயது சிறுவனை ஊழியர்கள் கம்பால் அடித்து சித்திரவதை செய்த சம்பவத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம்.
இவர் சேலம் அழகாபுரம் பகுதியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வளர்ந்து வந்த ஒன்பது வயது சிறுவன் ஒருவனை அவனது தாய் பார்க்க வந்த பொழுது மகனின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து காப்பக ஊழியர்களிடம் கேட்ட பொழுது சிறுவன் விளையாடும் பொழுது கீழே விழுந்து காயம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
சந்தேகம் அடைந்த சிறுவனின் தாய் காப்பகத்தில் உள்ள சிசிடிவியை கைப்பற்றி பார்த்த பொழுது காப்பகத்தில் பிசியோதெரபிஸ்ட் பாலாஜி மற்றும் பயிற்சியாளர் அந்தோணி ஆகிய இருவரும் சிறுவனை கம்பால் அடித்து சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் பிசியோதெரபிஸ்ட் பாலாஜி மற்றும் பயிற்சியாளர்கள் அந்தோணி, சகாயம், திருப்பதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.





