27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயது பெண்..!
கொடைக்கானலில் 27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயது பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த பிரமிளாவின் முதல் கணவர் இறந்து போக இரண்டாவதாக மற்றொருவரை திருமணம் செய்தார்.
இரண்டாவது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் பிரதீப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் பிரதீப் குமாருக்கு திருமணம் செய்துவைக்க அவரின் பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த பிரமிளா நீ வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பிரமிளாவின் எச்சரிக்கையை மீறி பிரதீப் திருமணத்திற்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரமிளா வீட்டுக்கு பிரதீப் வந்துள்ளான். அப்போது கல்யாண பேச்சு குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பிரமிளா கத்தியை எடுத்து பிரதீப்குமாரின் மார்புப் பகுதியில் குத்தியுள்ளார். பிரதீப்குமார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் தேனி அரசு மருத்துவமனையில் பிரவீன்குமார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பிரதீப்குமாரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பிரமிளாவை கொடைக்கானல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.






