சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை சிறுநீர் குடிக்க வற்புறுத்தி கொடுமை..!
தர்மபுரியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பழங்குடியின மக்களை சிறுநீர் குடிக்கச் சொல்லி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் செம்மனகல்லி காந்திநகர் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மோகனா என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட அவர்கள் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மோகனாவின் குடும்பத்தினர் ரமேஷின் உறவினர்கள் 3 பேரை கடத்தி சென்று சாதிரீதியாக திட்டியதோடு சிறுநீர் கழித்து அதனை குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பாலக்கோடு டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுநீர் குடிக்கச் சொல்லி துன்புறுத்தியதாக மோகனாவின் உறவினர்கள் வீரமணி, ஆனந்தன், முரளி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.






