ஆட்சியை பிடிப்பது யார்? இறுதிகட்ட களநிலவரத்துடன் குற்றம் குற்றமே வாரஇதழ் கருத்துக்கணிப்பு முடிவுகள்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், இறுதிகட்ட களநிலவரத்துடன், ”குற்றம் குற்றமே” வார இதழின் பரபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, திமுக அரியணையில் அமருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் அறிவிப்பானது, யாருமே எதிர்பாராத வகையில் முன்கூட்டியே பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று, இந்தியத் தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி, மார்ச் 19ம் ஆம் தேதி நிறைவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை, மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தாமக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தாமகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அந்த கட்சிக்கு குமரி லோக்சபா தொகுதியுடன் 25 சட்டசபைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளும் தலா 6 இடங்களை பெற்றுள்ளன. கொமதேக, தமிழக வாழ்வுரிமைக்கட்சிகளும் இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

இந்த தேர்தல் வித்தியாசமானது. ஏனென்றால், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் திமுக -அதிமுக இரண்டுமே முதல்முறையாக சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இதுதவிர அரசியலுக்கு புதிய அறிமுமான கமல், தனித்து களமிறங்கிய டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி என மொத்தம் 5 முனைப் போட்டி நிலவுகிறது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன், சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். எனினும் பிரதான போட்டி என்னவோ, அதிமுக – திமுகவுக்கு இடையேதான்.

இதனால் எந்த கட்சி வெற்றி பெறும், யாருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை கணிப்பது சற்று சிரமமாகவே இருந்தது. இதையறிந்து கொள்ள “குற்றம் குற்றமே” வார இதழ் கருத்து கணிப்பை மேற்கொள்ள முடிவெடுத்தது. அதன்படி, எங்களது நிருபர் குழு, தமிழகம் முழுவதும் வலம் வந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் இருப்பதால் இயல்பாகவே மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கும். ஆனால், இம்முறை அதிமுக அரசுக்கு எதிராக பெரிய அலை எதுவும் இல்லை.

கடந்த ஜனவரி மாதத்தில் திமுகவுக்கு வெற்றி எளிதாக இருந்த நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை, வித்தியாசமான பிரசார அணுகுமுறையால் திமுகவுக்கு அதிமுக கடும் போட்டியை தரத் தொடங்கியது. இதனால் வெற்றி அவ்வளவு எளிதல்ல என்பதை திமுக தலைமை உணர்ந்து, பின்னர் பிரசார வியூகத்தை மாற்றி அமைத்துள்ளது. எளிதான வெற்றி என்ற நிலை திமுகவுக்கு மாறி, கடுமையாக போராட வேண்டிய நிலைக்கு அது தள்ளப்பட்டது. அந்தளவுக்கு அதிமுக கடும் சவாலை தருகிறது. இத்தனைக்கும் அதன் ஓட்டுவங்கியை பல இடங்களில் அமமுக பிரிக்கிறது.
“குற்றம் குற்றமே” நடத்திய கள ஆய்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே தெரிந்தது. அதுதவிர தமிழக அளவில் நடத்திய ஆய்வில், 234 தொகுதிகளில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும், திமுகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற விவரங்களை தொகுத்துள்ளோம்.

அதன்படி, திமுக கூட்டணிக்கு 47% வாக்குகள் கிடைக்கின்றன; அதிமுக கூட்டணிக்கு 35%, மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு 6%, அமமுகவுக்கு 5%, நாம் தமிழர் கட்சிக்கு 5% கிடைக்கும் என்று தெரிய வருகிறது. எனினும் இதை தொகுதிகளின் எண்ணிக்கையில் பார்த்தால், திமுக கூட்டணி 171 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது; ஆளும் அதிமுக இம்முறை கடும் சரிவை சந்திக்கிறது. அந்த கூட்டணிக்கு 62 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக ஒரு இடத்தில் இடத்தில் பெற்றி பெறலாம் என்று தெரிகிறது.

அதே நேரம், தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் இருப்பதால், கடைசி நேரத்தில் தொகுதிக்குள் அரசியல் கட்சிகள் காட்டும் சித்து வேலைகளை பொருத்து, இதில் எண்ணிக்கை வேறுபாடு சற்று மாறுபடவும் வாய்ப்புள்ளது. மவுனமாக இருக்கும் மக்களின் மனதில் இருப்பது என்ன? வாக்கு என்ற ஆயுதம் கொண்டு அவர்கள் என்ன மாதிரி புரட்சி செய்யப் போகிறார்கள் என்பதற்கான விடை, மே2ம் தேதி தெரிந்துவிடும்.





