ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது: துரைமுருகன் ஆவேசம்
வருமானவரித்துறை சோதனை போன்ற அடக்குமுறைக்கு எல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை , மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
வேட்பாளர்களில் செல்வாக்கு படைத்த அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீடு மற்றும் அலுவலகம், முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்தது.
இந்த சோதனை குறித்து திமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், மிசா காலத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. எந்த சலனமும் இன்றி பணியாற்றினார் கருணாநிதி. தந்தை கருணாநிதியை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம்.
மத்திய அரசின் இந்த போக்கு ஜனநாயகம் அல்ல.வருமான வரி சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது.மகள் செந்தாமரை வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள். திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவது பயமுறுத்துவதற்கு தான். இதுபோன்ற பூச்சாண்டிக்கு திமுக எப்போதும் அஞ்சாது என்றார்.
இதேபோல் திமுக ஆதரவு அரசியல் கட்சிகள், இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார்.






