பிரியாணிக்கும், மதுபானத்திற்கும் வாக்குகளை விற்கின்றனர்..!
பிரியாணிக்கும், மதுபானத்திற்கும், சில ஆயிரங்களுக்கும் வாக்குகளை விற்றுவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு கோரிக்கை குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம், பல்வேறு இலவசங்கள் என தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது பற்றி நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கட்சிகளின் பெரும்பாலான வாக்குறுதிகள் தேவையற்றவை யாகவும் செயல்படுத்த முடியாதவையாகவும் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் நல்ல உட்கட்டமைப்பு வசதிகள் ,மருத்துவம், கல்வி, முன்னேற்றம் போன்றவை அதுகுறித்து கட்சியினர் வாக்குறுதிகள் இருப்பது நன்மை பயக்கும் என்றும் அறிவுறுத்தினர்.
தேர்தல் வாக்குறுதிகளை முறைப்படுத்த குறிப்பாக இலவசங்கள் வழங்குவது போன்றவற்றை முறைப்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் படி மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? தேர்தல் ஆணையம் எத்தனை தேர்தல்களில் அந்த அறிவுறுத்தல்களை பின்பற்றியுள்ளது? எந்தெந்த தேர்தல் வாக்குறுதிகளில் தேர்தல் ஆணையம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தது? சமூகநலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறி ஆக்கும் வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 20 கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினர்.
இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.






